ஃபேஸ்புக் ஆளில்லா அக்யூலா விமானம் எதற்கு ?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆளில்லா அக்யூலா விமானம் தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை  வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஃபேஸ்புக் அக்யூலா

சமீபத்தில் 200 கோடி மாதந்திர பயனாளர்களை ஃபேஸ்புக் எட்டியிருகின்ற நிலையில் உலகம் முழுமைக்கு இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக்கின் திட்டங்களில் ஒன்றான ஆளில்லா பறக்கும் அக்யூலா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

போயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தை கொண்டுள்ள ‘அக்யூலா’ ஆளில்லா விமானத்தின் வாயிலாக இணைய சேவையை உலகின் அனைத்து பகுதிக்கும் விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்ற இந்நிறுவனத்தின் முதற்கட்ட சோதனை ஜூன் 2016-ல் நடைபெற்ற போது ஆரம்பத்தில் தரையிறங்குவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்த விமானம் விபத்துக்குள்ளானது.

தற்போது மீண்டும் கடந்த மே மாதம் 2017-ல் நடைபெற்ற சோதனை ஓட்டம் குறித்தான தகவலை தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் ஆக்யூலா பற்றி கூறுகையில் ” அரிசோனா நகரில் 106 நிமிடங்கள் வானில் பறந்தது, ஃபேஸ்புக் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தாலும், 3000 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளது.  நினைத்த இலக்கு மற்றும் உயரத்தில் பறக்கவில்லையென்றாலும், சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தந்துதுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானத்தின் முக்கிய நோக்கமே வானில் நிலை நிறுத்தப்பட்டு லேசர் வாயிலாக ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத்தை அனுக முடியாத இடங்களிலும் இணையத்தை வழங்குவதற்கே இந்த திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

Recommended For You