Flipkart : ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனை சரிய காரணம் என்ன.. ?

இந்திய இ-காமர்ஸ் வலைதளங்களுக்கு புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையால் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் வருவாய் குறைய தொடங்கியுள்ளதால் வால்மார்ட்  நிறுவனம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய அரசினால் செயற்படுத்தப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையால் அமேசான், ஃபிளிகார்ட் நிறுவனங்கள் விற்பனை மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது. புதிய கொள்கைகளால் இந்நிறுவனங்கள், பங்குதாரர்களாக செயல்படுகின்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை இவர்களது சொந்த தளத்தில் விற்பனை செய்யவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தகைய பொருள்களை விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

மேலும் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் வாயிலாக ஆன்லைன் தளங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த எக்ஸ்குளூசிவ்  பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. 25 சதவிகிதத்திற்கும் மேல் பிரத்யேகமாக பொருட்கள் விற்பனை செய்யப்படுவது நீக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ந் தேதி முதல் இரு முன்னணி நிறுவனங்களின் விற்பனை சரிந்துள்ளது. மேலும் மோர் கன் ஸ்டேன்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் சீன சந்தையிலிருந்து அமேசான் வெளியேறியதை போன்று இந்தியாவில் இருந்து வால்மார்ட் நிறுவனம் வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ளது.

Flipkart : ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனை சரிய காரணம் என்ன.. ?

கடந்த வருடம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீகித பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலருக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் புதிய கொள்கையினால், இந்நிறுவனம் மிகப்பெரிய விற்பனை சரிவினை சந்திக்கும் என்பதனால் இந்நிறுவனம் வெளியேறுவதனை தவிர வேறு வழி இல்லை.

சமீபத்தில் ஜியோ நிறுவனம், இ-காமர்ஸ் சேவையில் நுழைந்துள்ள நிலையில் இதற்கு சாதகமாக இந்த முடிவினை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். டெலிகாம் துறையில் ஜியோ வந்த போது மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது நினைவிருக்கலாம்.