இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தொடர்பான தடை மீதான நடவடிக்கைக்கு, பப்ஜி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆரோக்கியமான மற்றும் சீரான உள் விளையாட்டு சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ள போர் முறை சார்ந்த விளையாட்டான பப்ஜி கேமுக்கு தடை விதிக்க பெற்றோர்கள் கோரி உள்ளனர். இதன் காரணமாக கோவா உட்பட பல்வேறு மாநில அரசுகள் தடைக்கான முடிவினை எடுத்து வரும் நிலையில் முதன்முறையாக பப்ஜி மொபைல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஆரோக்கியமான முறையில் விளையாடுவதற்கு ஏற்ற உள் விளையாட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மீதான மோகத்தை விட பப்ஜி போன்ற விளையாட்டுகளினால் மிக தீவரமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுப்பட்டு வரும் நிலையில், சில கசப்பான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. குறிப்பாக 18 வயது சிறுவன் மொபைல் போன் வாங்குவதற்கு பெற்றோர்களிடம் பணம் கேட்டு தராத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, பப்ஜி விளையாட்டுக்கு தடை விதித்த பெற்றோர்களை கொலை செய்த விவகாரம் என பட்டியல் நீள்கின்றது.

இந்நிலையில் பப்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு ஆரோக்கியமான மற்றும் சீரான விளையாட்டு சூழலை வளர்ப்பதற்கு, பல புதிய அம்சங்கள் மற்றும் விரிவாக்கங்களை நாங்கள் வளர்த்து வருகிறோம், இது வீரர்களுக்கு ஒரு சிறப்பான சூழலை வழங்குவதற்கு உதவும் வகையில் உருவாக்கப்படும். மேலும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள மிகவும் உணர்வுப்பூர்வமான விளையாட்டு பிரியர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளது.