67 லட்சம் ஆதார் எண்கள் கசியவில்லை என மறுத்த இண்டேன் கேஸ்

இந்தியாவின் 27 சதவீத வீட்டிற்கான கேஸ் வழங்குநராக விளங்கும் இண்டேன் கேஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் ஆதார் விபரங்களை தனது இணையதளத்தின் தவறான வடிவமைப்பினால் கசிய விட்டுள்ளதாக பிரபல ஆதார் தொடர்பான இணையதள ஆய்வாளர் எல்லியாட் ஆல்டர்சன் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபலமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் இண்டேன் கேஸ் பிரிவு இணையதளத்தில் டீலர்கள் விபரங்கள் உட்பட சுமார் 67 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் விபரங்களை மிக எளிமையாக பெறும் வகையிலும், அதனை கூகுள் வலைதளத்தில் தேடினாலும் கிடைக்கின்ற வகையில் இன்டெக்ஸ் செய்ய அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

டெக்கிரன்ச் தளம் மூலம் வெளியிட்டுள்ள பதிவில், மிக இலகுவாக கூகுள் இன்டெக்ஸ் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள சுமார் 11,000 டீலர்கள் வாயிலான விபரங்கள் உட்பட சுமார் 67 லட்சம் பயனாளர்களின் ஆதார் தொடர்பான விபரங்களில் சிலவற்றை UIDAI வலைதளத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது ஐபி முகவரியை இண்டேன் நிறுவனம் தற்போது முடக்கியுள்ளதால் மேற்கொண்டு தன்னால் ஆய்வை தொடர முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

update :-

ஆனால் இண்டேன் கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எந்தவொரு ஆதார் தகவலும் வெளியாகவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.  இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் ஆதார் எண் விபரங்களை எல்பிஜி மானியம் வழங்கவே பயன்படுத்துகின்றது. மற்றபடி வேறு எவ்விதமான ஆதார் விபரங்களையும் பெறுவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த வலைதளத்தில் எந்த ஆதார் விபரங்களும் ஹோஸ்டிங் செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

67 லட்சம் ஆதார் எண்கள் கசியவில்லை என மறுத்த இண்டேன் கேஸ்