அமெரிக்கா அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகின்ற ஃபேஸ்புக் , 2019 ஆம் ஆண்டின் இந்திய தேர்தலிலும் மிகப்பெரிய மாற்றத்தை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வாயிலாக ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா – ஃபேஸ்புக்

சமீபத்தில் ஃபேஸ்புக் மற்றும் அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மீது கடுமையான குற்றச்சாட்டை, இங்கிலாந்தின் சேனல் 4 தளம் சுமத்தியுள்ளது. மக்களின் அந்தரங்க தகவல்களை திருடி அதற்கு ஏற்ப தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்த காரணமாகவே , புதிய அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார் என குறிப்பிட்டுள்ளது.

மனநிலையை மாற்றும் முகநூல்

2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் உளவியில் ரீதியாக மக்கள் மனநிலையை ஆய்வு செய்து, தேர்தல் ஆலோசனைகள், தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் ஆகியோரிடம் மாற்றத்தையும் உண்டு செய்யும் நிறுவனமாக செயல்படுகின்றது.

அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கும், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது. விஷயத்துக்கு வருகிறோம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோகென் என்பவர் ‘குளோபல் சயின்ஸ் ரிசர்ச்’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் அமெரிக்காவில் மக்களிடம் உளவியல் ரீதியான ஒருவகையான போட்டியை நடத்தினார். பணம் செலுத்தி பங்குபெறும் இப்போட்டியில் ஏறக்குறைய 5 கோடி மக்கள் பங்கேற்றனர்.

இந்தத் தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்துக்கு , அலெக்சாண்டர் கோகென் நிறுவனம் வழங்கி இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மிக வலிமையான, அதிநவீன மென்பொருள் உதவியுடன் மக்களின் மனநிலையை அறிந்து பிரச்சார தளத்தை டிரம்புக்கு வகுத்துக் கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 3 வேட்பாளர்களுக்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் பணியாற்றியுள்ளது. இதில் பணத்தை வாரி இரைத்த டிரம்புக்கு கூடுதல் முக்கியத்துவம்.

ஃபேஸ்புக் மூலம் கிடைத்த பயனாளிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே டிரம்ப் பிரச்சாரத்தை நாளுக்கு நாள் மாற்றி, வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.

இதே தந்திரத்தைத்தான், அனலிட்டிகா நிறுவனம் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறவேண்டுமா என்று நடத்தப்பட்ட பிரிக்ஸிட் வாக்கெடுப்பின்போதும் கையாண்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

டெலிட் ஃபேஸ்புக்

பயனாளிகளின் அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வெளியானதை தொடர்ந்து முகநூல் மீதான எதிர்ப்பலைகள் எழ தொடங்கியுள்ளது. ஃபேஸ்புக் டெலிட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான பிரெயின் ஏக்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் #DeleteFacebook என்ற டேக் டிரென்ட் ஆகி வருகின்றது. ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியதை தொடர்ந்து, அமெரிக்கச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் படுமோசமாக சரிந்தன. ஏறக்குறைய ஒரே நாளில் ரூ.2 லட்சம் வரை குறைந்துள்ளது.

மோடி அரசு அஞ்சுகின்றதா ?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் நிக்ஸை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார் என பாஜக குற்றம் சாட்டுகிறது. எனவே, அமெரிக்கா தேர்தலை போன்றே இந்திய தேர்தலில் மாற்றத்தை நிகழ்த்தலாம் என அஞ்சப்படுகின்றது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், “இந்தியர்களின் தகவல்கள் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் சமரசம் செய்துக் கொண்டது என்பது தெரியவந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் விடுப்போம்,” என கூறினார்.
இன்று இந்தியாவில் 20 கோடி பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்து உள்ளார்கள். இந்தியர்களின் தகவல்கள் பேஸ்புக் மூலம் பகிரப்பட்டால், நாம் கடுமையான ஐடி சட்டத்தை வைத்து உள்ளோம். தகவல்கள் பகிர்வு விவகாரத்தில் இந்தியாவால் பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் விடுக்க முடியும். அமெரிக்கா மற்றும் கென்யா தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தன்னுடைய செல்வாக்கை செலுத்தியிருக்கலாம். நாங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிக்கிறோம், இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் செல்வாக்கை மேற்கொள்ள சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்.