கூகுள் ரூ.75,000 கோடியை டிஜிட்டல் இந்தியாவில் முதலீடு #GoogleForIndia

6வது ஆண்டாக நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வில் ரூ.75,000 கோடி முதலீட்டை அடுத்த 5-7 ஆண்டுகளில் மேற்கொள்ள உள்ளதாக ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு விரிச்சுவல் முறையில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வில் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார்.

கூகுள் ஃபார் இந்தியா 2020

இந்த நிகழ்வில் பேசிய கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், மொபைல்கள் மூலம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் டிஜிட்டல் சார்ந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், கூகிள் ஃபார் இந்தியா டிஜிட்டல் முதலீட்டை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த முயற்சியின் மூலம், அடுத்த 5-7 ஆண்டுகளில், ரூ. 75,000 கோடி அல்லது சுமார் 10 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு முதலீடு செய்வோம். பங்கு முதலீடுகள், கூட்டாண்மை மற்றும் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம். இது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.

இந்தியாவின் டிஜிட்டல் திட்டத்தில் முக்கியமான நான்கு துறைகளில் முதலீடுகள் கவனம் செலுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவை பின் வருமாறு;-

1 . இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் மிக இலகுவாக அனைத்து தகவல்களை பெறும் வகையிலான திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட உள்ளது. குறிப்பாக தமிழ்,பஞ்சாபி, இந்தி அல்லது பிற இந்திய மொழிகளில் இலகுவாக தகவல் பெறுவதே நோக்கமாகும்.

2. இரண்டாவதாக, இந்திய மக்களுக்கான தனித்துவமான தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகள் மற்றும் சேவையை துவங்குவது.

3. வணிகங்கள் அல்லது டிஜிட்டல் மாற்றத்திற்கு சிறப்பான அதிகாரம் வழங்குவது.

4. சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் தொழில்நுட்பத்திற்கும், சமூக நலனுக்காக செயற்கை அறிவுத்திறனை (AI) மேம்படுத்துவது.

இந்த நான்கு முக்கிய துறைகளில் டிஜிட்டல் இந்தியாவின் மேம்பாடுகளை உயர்த்த உள்ளதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.