ஹுவாவே

சீனாவின் வாவே நிறுவனம், அமெரிக்காவின் தடையை தொடர்ந்து தனது சொந்த ஹாங்மெங் அல்லது Oak ஓஎஸ் கொண்ட 10 லட்சம் மொபைல்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இயங்குதளத்துக்கான ஆப் ஸ்டோரில் செயலிகளை வடிவமைக்க அழைப்பு விடுத்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராகவும், 5ஜி தொலைத்த் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பதில் முதன்மையாக விளங்கும் வாவே நிறுவனத்தினை கருப்பு பட்டியலில் அமெரிக்க அரசு இணைத்துள்ளது. இதன் காரணமாக ஹுவாவே நிறுவனம், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க தயாரிப்புகளை பயன்படுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வாவே Oak ஓஎஸ்

ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ஆண்ட்ராய்டு ஆதரவு நீட்டிக்கப்படிருந்தாலும், அதன் பிறகு தடை விலகும் பட்சத்தில் ஹிவாவே தனது ஓஎஸ் அறிமுகத்தை தாமதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேளை தடையை அமெரிக்கா நீக்கவில்லை எனில் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான நாடுகளில் தனது சொந்த ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன், லேப்டாப், கணினி, டிவி, அணியக்கூடிய கருவிகள் மற்றும் கார்களுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஹாங்மெங் ஓஎஸ் அல்லது ஓக் ஓஎஸ் கொண்ட 10 லட்சம் மொபைல்கள் சோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளில் உள்ள பயனாளர்களிடம் வழங்கி சோதனை செய்ய உள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி கூகுள் பிளே ஸ்டோர் போன்ற ஆப் ஸ்டோரினை தனது ஓஎஸ்களில் வாவே நிர்வகித்து வருகின்றது. இது போன்ற ஸ்டோரினை தனது ஓஎஸ் பயனாளர்களுக்கு என உருவாக்கியுள்ளது. இந்த இயங்குதளத்தில் ஆப்களை உருவாக்க டெவலப்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

முதலிடத்தை நோக்கி வாவே

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ள திட்டமிட்டிருந்த வாவே நிறுவனம் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக தனது விற்பனையில் சரிவினை சந்தித்துள்ளதால், மேலும் சில நாட்கள் ஆகலாம் என குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் ஸ்மார்ட்போன்களை வாவே விற்பனை செய்து வருகின்றது.

வாவே ஓக் ஓஎஸ் நிச்சியமாக கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மிகுந்த சவாலாகவே விளங்கும் என கருதப்படுகின்றது.