இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

இந்தியாவில் டிக்டாக் உட்பட 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றாக ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற சேவையை இந்தியாவில் இன்றைக்கு மாலை 7.30 மணிக்கு சோதனை அடிப்படையில் வெளியிட உள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

குறிப்பாக டிக்டாக் தடைக்குப் பின்னர் சில இந்திய செயலிகளான சிங்காரி, ரோப்ஸோ, மிட்ரான், மோஜ் உள்ளிட்ட செயலிகள் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ள நிலையில், இதனை ஃபேஸ்புக் தனக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொள்ள இன்ஸ்டாகிராமில் சிறிய மற்றும் நீண்ட வீடியோவை மேற்கொள்ளும் வகையில் ரீல்ஸ் வசதியை கொண்டு வரவுள்ளது.

இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்யப்படுகின்ற பெரும்பாலான வீடியோக்கள் 15 விநாடிகளுக்கு குறைவாகவோ அல்லது குறுகிய வீடியோவாக அமைந்திருக்கின்றது. ரீல்ஸ் சேவையின் மூலம் முன்னணி மீடியாக்கள் மற்றும் தனிநபர் க்ரியேட்டர்கள் பெரும்பகுதி பயனடைவார்கள் என இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளது. இந்த சேவை பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்போது இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக பயனர்கள் குறுகிய வடிவ வீடியோக்களை உருவாக்க அனுமதிக்கும், இது இயல்பாகவே இன்ஸ்டாகிராமின் எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் பகிரப்படும். இருப்பினும், பயனர்கள் தங்கள் வீடியோக்களை நேரடியாக தங்கள் பக்கம் அல்லது ஃபீடிலும் பகிர அனுமதிக்கின்றது.

ரீல்ஸ் பயன்பாடு சிறப்பாக அதிகரிக்கும் பட்சத்தில் விளம்பரம் மூலம் கிரியேட்டர்கள் வருவாயை ஏற்படுத்திக் கொள்ள ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

ரீல்ஸ் எப்பொழுது கிடைக்கும் ?

தற்போது பயன்பாட்டில் உள்ள அதே இன்ஸ்டாகிராம் செயலில் ரீல்ஸ் சேவை வழங்கப்பட உள்ளது. இன்றைக்கு மாலை 7.30 மணிக்கு செயலியை மேம்படுத்தி வெளியிட உள்ளதால், விரைவில் இந்த சேவையை இந்தியர்கள் பெறுவார்கள். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் பல்வேறு டிக்டாக் பிரபலங்கள் செயல்பட உள்ளனர்.