இன்றைக்கு கூகுள் நிறுவனம் சர்வதேச மகளிர் தினம் 2019 (International Women’s Day 2019) முன்னிட்டு சிறப்பு சித்திரம் ஒன்றை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும்  மார்ச் 8-ஆம் தேதியை சர்வதேச அளவில் பெண்களின் உரிமைகளுக்காக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இணைய உலகின் ஜாம்பவான் முக்கிய நிகழ்வு தினங்களை கூகுள் டூடுல் மூலம் வெளியிட்டு சிறப்பு செய்து வருகின்றது. நேற்றைக்கு கூட ரஷ்யாவின் கணித மேதை ஆல்கா லேடிசென்ஸ்கயா அவர்களின் 97வது பிறந்த நாள் டூடுலை வெளியிட்டிருந்தது.

 

சர்வதேச மகளிர் தினம் வரலாறு

இன்றைக்கு கொண்டாடப்படுகின்ற சர்வதேச மகளிர் தினம் 2019 (International Women’s Day 2019 history) கடந்த நூற்றாண்டில் பெண்கள் மேற்கொண்ட புரட்சியின் மூலம் பெண்கள் தினம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்ட நிலையில், 1975 ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 8ம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

முதன்முறையாக மகளிர் தினம் 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி சோசலிஸ்ட் கட்சி மூலம் கொண்டாடப்பட்டது. நியூயார்கில் 1908 ஆயத்த ஆடை தொழிலாளர்கள் மேற்கொண்டதை பெருமைப்படுத்தும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இந்த கட்சி கொண்டாடியது. இதற்கு காரணம் பெண்கள் தங்களின் வேலையில் பாகுபாடுகளுக்கு எதிராக போராடினார்கள்.

 

1910-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமையை வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர்.

இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் விளைவாக அனைத்துலக மகளிர் தினம் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாடத்தில் பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். அதில் வாக்குரிமையோடு, பணிபுரிவதற்கான உரிமையும், வேலையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

1913-1914-ல் முதல் உலகப் போருக்கு எதிராகவும்,  ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும், அதே வருடத்தில் மார்ச் 8-ம் தேதி வாக்கில் ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட தினமாக மார்ச் 8ந் தேதி கருதப்படுகின்றது.

இன்றைய சர்வதேச மகளிர் தினம் 2019 கூகுள் டூடுல்

பெண்கள் தினம் 2019 டூடுல் பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். இந்த டூடுல் உத்வேகம் அளிக்கும் 13 சர்வதேச பெண் பிரபலங்களை நினைவுக்கூறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்களின் பதிமூன்று மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இந்தியாவின் குத்துச் சண்டை வீராங்கனை  மேரி கோம் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரியாக (ஐ.எஃப்.எஸ்.) உள்ள பார்வையற்ற பெண் NL பெனோ ஜெஃபைன் சிந்தனைகள் இடம்பெற்றுள்ளது.

Happy International Women’s Day 2019!