ஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.

ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பெறுவதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

இதுகுறித்து பேசிய அவர், ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்தி 5 கோடி வீடுகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்க முடியும் என்றார். மேலும், இந்த சேவை முதற்கட்டமாக 1100 நகரங்களில் தொடங்கப்படும் என்றார்.

இந்த சேவையை பெற அந்தந்த பகுதியில் உள்ளோர் ஆன்லைனில் பதிவு செய்தால், பெரும்பான்மையை பொறுத்து, முன்னுரிமை அடிப்படையில் பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் வழங்கும்.

எப்படி விண்ணப்பிப்பது?

1. Jio.com / My Jio APP ல் உள்ள ஜிகாஃபைபர் இணையப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்
2. முகவரி பெட்டியில், உங்கள் முகவரி தானாக இடம்பெறும். அவ்வாறு மாறவில்லை என்றால், Change என்பதை கிளிக் செய்து முகவரியை மாற்றலாம்.
3. அடுத்து செல்பேசி எண்ணை பதிவிட வேண்டும். பின் Generate OTP பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
4. செல்பேசிக்கு அனுப்பப்பட்டிருக்கும் OTP எண்ணை பதிவிட்டு, உங்கள் பகுதி குறித்த விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
5. Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது, உங்கள் விவரம் பதிவாகிவிடும்.

இந்த பதிவு, உங்கள் பகுதியில் ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையை பெறுவதற்கான விருப்பப் பதிவாகும். இதேபோல், உங்கள் பகுதியினரும் விருப்பங்களை தெரிவிப்பதன் மூலம் முன்னுரிமை பேரில் இணைப்புகள் வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

ஆனால், ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு எப்போது வழங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.