உலகின் முன்னணி கணினி ஓஎஸ் வழங்குநராக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடு பொறி பிங் (Bing) தற்போது நவீன செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை பெற்று சிறப்பான அனுபவத்தை பயனர்களுக்கு வழங்க தொடங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் பிங்

உலகின் தேடுபொறி சந்தை மதிப்பில் 75 சதவீத பங்களிப்பை பெற்று விளங்கும் கூகுள் நிறுவனம் முதலிடத்திலும் தொடர்ந்து யாகூ மற்றும் பிங் உள்ளது. உலகளாவிய சந்தை மதிப்பில் 5.6 சதவீதம் மட்டுமே பிங் பெறுள்ளது. இந்நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட் அசிஸ்டன்ஸ் கொர்டனா தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நவீன யுக்த்திகளில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு திறனை பின்பற்றி முற்றிலும் மேம்பட்ட பிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களை விட மிக துல்லியமாக பயனாளர்கள் விரும்பும் தகவல்களை தேடுபொறி வாயிலாக வெளிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட்டின் நுண்ணறிவு ஒருங்கிணைப்பு பிரிவின் துணை தலைவர் ஜோடி ரிபாஸ் கூறுகையில், உண்மையான ஒரு தகவலை மக்களுக்கு தரும் பொறுப்பு தேடு பொறிக்கு உள்ளது. ஒரு விஷயத்தை தேடும் போது, அது பற்றி எத்தனை லிங்க்.,கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. அந்த லிங்க்.,களுக்குள் சென்று தேடுவதற்கும் பலரும் விரும்புவதில்லை.

இதனை கருத்தில் கொண்டு நம்பகமான, உறுதியான ஆதாரங்களுடனான தகவலை எளிமையாக தர வேண்டும் என்பதற்காக இந்த தேடு பொறியை உருவாக்கினோம். பயன்படுத்துவோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் புதிய திறன்கள் கொண்டதாக இதை வடிவமைத்துள்ளோம். விரைவில் அடுத்தடுத்து பல வகையிலும் மேம்படுத்த உள்ளோம் என்றார்.