mwc 2020update :- கொரோனா வைரஸ் பாதிப்பு தீவரமடைந்துள்ளதால் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2020 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மொபைல் நுட்பங்களின் மிகப்பெரிய கண்காட்சி அரங்கமான சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC-Mobile World Congress) 2020 பார்சிலோனாவில் பிப்ரவரி 24, 2020 முதல் பிப்ரவரி 27, 2020 வரை நடைபெற உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்காது என அறிவித்துள்ளன. எனவே மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் களையிழக்குமா என்ற கவலை பலருக்கும் அதிகரித்துள்ளது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் என்றால் என்ன?

வருடாந்திரம் நடைபெறுகின்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் கண்காட்சில் உலகளாவிய மொபைல் நிறுவனங்கள், தொழிற்நுட்ப சாதன உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், தொலைத் தொடர்பு கருவி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உள்ளடக்க உரிமையாளர்கள் பங்கேற்று தங்களுடைய புத்தாக்க முயற்சிகளை பொதுப் பார்வைக்கு கொண்டு வரும் அரங்கமாக விளங்குகின்றது. முதன்முறையாக 1987 ஆம் ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் துவங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பீதியால் தவிர்க்கும் முன்னணி நிறுவனங்கள்

மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கினை பொறுத்தவரை சீனாவின் முன்னணி மொபைல் தயாரிப்பாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், இலகுவாக சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பயமும் ஒருங்கே எழுந்துள்ளதால் இம்முறை இந்த கண்காட்சி களையிழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக முதலில் எல்ஜி மற்றும் இசட்டிஇ நிறுவனங்கள் இம்முறை கண்காட்சியில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்த நிலையில், தற்போது உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான எரிக்கசன் உட்பட சோனி மொபைல், அமேசான்,விவோ, இன்டெல், மீடியாடெக் மற்றும் என்விடியா போன்றவை பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும் சில நிறுவனங்கள் இந்த அரங்கினை விட்டு வெளியேறும், மேலும் பெரும்பாலான சீன நிறுவன உயர் அதிகாரிகளுக்கு மாற்றாக இந்நிறுவன மற்ற நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்கலாம் என எதிர்பார்கப்படுகின்றது.

இந்நிலையில் MWC கண்காட்சியை ஒருங்கிணைக்கும் GSMA  வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு ;- இந்த வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகின்றது. சீனாவின் பிற பிராந்தியங்களில் வரவுள்ள மற்ற பார்வையாளர்கள், 14 நாட்களுக்கு முன்பே அவர்கள் சீன நாட்டிற்கு வெளியே இருந்ததை நிரூபிக்க வேண்டும். மேலும், கைக்குலுக்குவதனை தடுக்கவும், நோயால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளுடன் செயல்பட மருத்துவ பணியாளர்களும் கண்காட்சியில் இருப்பார்கள் என வெளியிடப்பட்டுள்ளது.