ரூ.42,500 ஆரம்ப விலையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ விற்பனைக்கு வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக ஐபோன் எஸ்இ 2020 விற்பனைக்கு ரூபாய் 42,500 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் இப்போது மிகவும் சக்திவாய்ந்த A13 பயோனிக் சிப்செட் உடன் 64GB, 128GB மற்றும் 256GB என மூன்று விதமான ஸ்டோரேஜ் வசதியைப் பெறுகின்றது. மற்ற வேரியண்டுகளின் விலை அறிவிக்கப்படவில்லை.

டிசைன் & டிஸ்பிளே

ஐபோன் 8 மாடலின் வடிவமைப்பு தாத்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஐபோன் எஸ்.இ மொபைலில் மெட்டல் பாடி வழங்கப்பட்டு 4.7 அங்குல ரெட்டினா டிஸ்பிளே 1334×750 பிக்சல் பெற்று கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று விதமான நிறங்களை பெறுகின்றது. பின்புறத்தில் நேர்த்தியான முறையில் லோகோ வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த டச் ஐடி அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

பிராசெஸசர்

ரேம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் ஆப்பிளின் ஐபோன் 11, ஐபோன் 11 புரோ உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்ட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த A13 பயோனிக் சிப்செட் மூலம் ஐஓஎஸ் 13 இயங்குதளத்தால் இயக்கப்படுகின்றது. 64GB, 128GB மற்றும் 256GB என மூன்று விதமான சேமிப்பினை பெறுகின்றது.

கேமரா

ஒற்றை கேமரா ஆப்ஷனை பெறுகின்ற ஐபோன் எஸ்இ மாடலில் பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டு f/1.8 உடன் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் கொண்டு மிக நவீனத்துமான வகையில் படமாக்கும் நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த கேமராவின் மூலம் 4K வீடியோவினை 24 fps, 30 fps மற்றும் 60 fps முறையில் பதிவு செய்ய இயலும்.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 7 மெகாபிக்சல் சென்சாருடன்  f/2.2 துளை பெற்றுள்ளது.

ரூ.42,500 ஆரம்ப விலையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ விற்பனைக்கு வெளியானது

விலை

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள ஐபோன் எஸ்இ ஆரம்ப விலை ரூ.42,500 என குறிப்பிட்டுள்ளது. மற்ற மாடல்களில் விலை அறிவிக்கப்படவில்லை.