மொபைல்களுக்கு மொசில்லா 'பயர்பாக்ஸ் லைட்' அறிமுகமானது

4 MB மட்டும் கொண்ட ஆண்ட்ராய்டிற்கான மொசில்லா ‘பயர்பாக்ஸ் லைட்’  பிரவுசர் இந்தியா உட்பட தெற்காசியா நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களின் தனியுரிமை மீது கவனம் மற்றும் மிக வேகமாக செயல்படும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் பயர்பாக்ஸ் லைட் உலாவி விளங்க உள்ளது.

மொசில்லா நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபரில் பயர்பாக்ஸ் ராக்கெட் என இந்தோனேசியாவில் சோதனை முறையில் அறிமுகம் செய்த உலாவியை தற்போது, மொசில்லா ‘பயர்பாக்ஸ் லைட்’ என்ற பெயருடன் பங்களாதேஷ், புருனே, கம்போடியா, சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் என 15 நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பயர்பாக்ஸ் லைட் பிரவுசரின் சிறப்புகள் மற்றும் வசதிகள்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு என பிரத்தியேமான தனியுரிமை சார்ந்த கவனத்தை வழங்கும் நோக்கிலும் மிக விரைவாக உலகளாவிய வலையினை உலாவுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரவுசரில் வழங்கப்பட்டுள்ள டர்போ முறை ஆனது, மூன்றாம் தரப்பு டிராக்கர்களை தடுக்கும். இந்த முறை குறைந்த தரவில் வலைத்தளங்கள் காணவும் மற்றும் வலைத்தளங்களை மிக வேகமாக உலாவ வழி வகுக்கின்றது.

மொசில்லா ஆசியாவின் தலைவரான ஜோ செங் கூறுகையில் ” இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய இணைய சந்தையாகவும் மற்றும் மொபைல் முதல் நாடாகவும் 2023 ஆம் ஆண்டில் 666.4 மில்லியனாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் இணைய பயனாளர்களில் பெரும்பான்மையானோர் மொபைல் போன் மூலம் இணையத்தை பெறுகின்றனர். டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் போன்றவற்றில் லேண்ட் லைன் இணைப்பினை பெறுபவர்களை விட மொபைல் மூலம் உள்ள அதிகப்படியான பயனாளர்கள் மிக விரைவான மற்றும் பாதுகாப்பான வலை உலாவுலை வழங்க ஃபயர்பாக்ஸ் லைட் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஃபயர்ஃபாக்ஸ் லைட்  உலாவும் மற்றும் ஆன்லைனில் தேடுவதற்கான சிறந்த பயன்பாடாக மட்டும் இல்லாமல், எங்களது பயனர்களுக்கு அதிக ஈடுபாடு கொள்ளும் வகையில் செய்திகள், விளையாட்டு, ஷாப்பிங், பயண ஒப்பந்தங்கள் மற்றும் பலவற்றின் தரமான உள்ளடக்கத்தை நாங்கள் வழங்க உள்ளோம், “என்று ஜோ செங் குறிப்பிட்டார்.