ரிலையன்ஸ் தொடங்க உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளம்

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டீரீஸ் மற்றும் ஜியோ இணைந்து புதிய ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜியோ டெலிகாம் நிறுவனம் 28 கோடி வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கி வரும் நிலையில் , ஜியோ நிறுவனம் தனது அடுத்த சேவையாக ஆன்லைன் ஷாப்பிங் செய்கின்ற இளைய தலைமுறையினரை குறிவைத்து மிகப்பெரிய அளவில் இ-காமர்ஸ் வலைதளத்தை தொடங்க உள்ளதை முகேஷ் அம்பானி உறுதிப்படுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக குஜார்த்தில் உள்ள சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ரீடெயில் எனப்படும் ஆஃப்லைன் அங்காடிகள் நாடு முழுவதும் 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்களாக இயங்கி வருகின்றன.

ஜியோ நிறுவனத்தின் மிக வலுவான 4ஜி இணைய பயனாளர்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டாக தொடங்கப்பட உள்ள இந்த ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம் மிகப்பெரிய அளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய சந்தையில் செயல்படுகின்ற அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஃபிளிப்கார்ட் ஆகிய வலைதளங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும். மேலும் பேடிஎம், ஸ்னாப்டீல் போன்ற தளங்களுக்கும் சவாலாக அமைந்திருக்கும்.

ரிலையன்ஸ் தொடங்க உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளம்

வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை பிரத்யேகமாக விற்பனை செய்யவோ, சிறப்பு சலுகைகள் வழங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதனால் மிகப்பெரிய லாபத்தை அம்பானி குறிவைத்துள்ளார்.