தமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கி ஏர்செல் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சில நாட்களாக சிக்னல் பிரச்சனையில் தவித்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு ஏர்செல் திரும்பியுள்ளது.

ஏர்செல் Port

கடந்த புதன்கிழமை முதல் ஏர்செல் நிறுவனம் சேவை தமிழ்நாடு உட்பட பல்வேறு வட்டங்களில் மிகுந்த பாதிப்பை அடைந்திருந்த நிலையில்  தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9000 செல்போன் டவர்களில் 6500 செல்போன் கோபுரங்களில் இருந்து சிக்னல் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது பரவலாக அனைத்து பகுதிகளில் ஏர்செல் டவர் பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் ,ஒரு சில பகுதிகளில் சிக்னல் கிடைக்கப் பெறவில்லை என்றால் பிஎஸ்என்எல்  சேவையை பயன்படுத்திக் கொள்ள அதிகார்வபூர்வமாக வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் ஏர்செல் நெட்வொர்கிலிருந்து வெளியேறும் முயற்சியில் ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் MNP எனப்படுகின்ற மொபைல் எண்ணை மாற்றாமல் ஆப்ரேட்டரை மாற்றிக் கொள்ளும் சேவைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவிக்கவில்லை. மேலும் ஏர்செல் சேவை தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாக மட்டுமே அறிவிக்கப்பட்டு வருவது குறிப்படதக்கதாகும்.

தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஏர்செல் சிக்னல் கிடைக்க தொடங்கியிருந்தாலும், போர்ட் செய்வதற்கான எண்ணத்தை பயனாளர்கள் கைவிடுவதாக இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

எந்த நெட்வொர்க் மாறலாம் ?

தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை நடைமுறை அதிகரித்து வருவதனால் 4ஜி ஆதரவு பெற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல் போன்களில் ஒற்றை சிம் கார்டிற்கு மட்டுமே 4ஜி ஆதரவை வழங்கும் மொபைல் போன் கிடைப்பதனால், ஜியோ சேவையை முன்பே பயன்படுத்தி வருபவர்கள் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்துவது சிரமம் ஆகும்.

விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கவிருப்பதனால் பிஎஸ்என்எல் நிறுவனக்கு மாறுவது ஏற்றதாக அமைந்திருக்கும், இதனை தொடர்ந்து வோடபோன் , ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களும் சந்தையில் முக்கிய பங்காற்றி வருகின்றது.

மொபைல் நம்பர் போர்ட் வழிமுறை விபரம்

உங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘PORT’ என எழுதிய மொபைல் நெம்பருடன் 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் பன்னுங்க.  (எ.கா) PORT 98xxxxxx00′ to 1900

உங்களுக்கு UPC கோடு (Unique Portability Code) கிடைக்கும்.

உங்கள் அருகாமையில் உள்ள மொபைல் அங்காடி அல்லது அங்கீகாரம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குபவர்களின் வாயிலாக உங்கள் ஆதார் (eKYC) மூலம் அடையாளத்தை சமர்ப்பியுங்கள்.

சில நாட்களுக்கு பிறகு உங்கள் முந்தைய சேவை நிறுவனத்தில் இருந்து விடை பெற்று புதிய சேவைக்கு மாறலாம்.