மைக்ரோமேக்ஸ் மொபைல் தயாரிப்பாளருடன் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனமும் இணைந்து 4ஜி வோல்ட்இ ஆதரவை பெற்ற ரூ.2200 விலையில் பாரத்1 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் மாடலுக்கு என பிரத்தியேகமான ரூ.97 திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் 97

சில வாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஜியோபோன் மற்றும் ஏர்டெல் 4ஜி போன் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் மாடலுடன் பிஎஸ்என்எல் சிம் கார்டு பன்டில் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.97 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குவதுடன் டேட்டா சலுகை ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களை விட மிக குறைந்த விலை திட்டமாகும்.

28 நாட்களுக்கு 5ஜிபி டேட்டா 2ஜி/3ஜி சேவைகளில் வழங்கின்ற நிலையில் 5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 80Kbps  வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது.

28 நாட்களுக்கு அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் வரம்பற்ற அழைப்புகளை நாடு முழுவதும் வழங்குவதுடன், 28 நாட்களுக்கு பிறகு இந்த திட்டத்தில் நிமிடத்திற்கு ரூ.1 கட்டணத்தில் அழைப்புகளை பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.153 கட்டணத்தில் அன்லிமிடேட் கால்கள் மற்றும் 500 எம்பி டேட்டா வழங்குகின்ற நிலையில், ஏர்டெல் நிறுவனம் ரூ.169 கட்டணத்தில் வரம்பற்ற கால்கள் மற்றும் 500 எம்பி டேட்டா வழங்குகின்றது.

பாரத் 1

பாரத் 1 மொபைல் போன் 2.4 அங்குல QVGA திரையுடன் டி9 கீபோர்டு கொண்டிருப்பதுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் பெற்றதாக உள்ள கருவி 512MB ரேம் கொண்டு 4ஜிபி சேமிப்பை கொண்டதாக வந்துள்ளது.

2000mAH பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் பெற்றதாகவும், முன்புறத்தில் VGA  கேமரா பெற்றதாக வந்துள்ளது. 22 இந்திய மொழி ஆதரவினை பெற்றுள்ள இந்த கருவியில் பீம் செயலியுடன் நேரலையில் தொலைக்காட்சி (Zenga TV) சேவைகளை பெறும் வகையிலான வசதியை பாரத் ஒன் பெற்றுள்ளது.

ஜியோபோனை போல குறிப்பிட்ட சேவையை மட்டும் பயன்படுத்தாமல் எந்தவொரு நெட்வொர்க்கினையும் பயன்படுத்தும் வகையில் மைக்ரோமேக்ஸ் பாரத்-1 போன் அமைந்துள்ளது. வருகின்ற அக்டோபர் 20ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரீடெயில்களிடம் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி

நாட்டின் பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் 4ஜி வோல்ட்இ சேவையை வரும் ஜனவரி 2018 முதல் தொடங்க உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் தீபாவளி ஆஃபர்

பி.எஸ்.என்.எல் லக்ஷ்மி ஆஃபர் என்ற பெயரில் அக்டோபர் 16 முதல் 21 வரை 50 சதவீதம் கூடுதல் டாக்டைம் பெறும் வகையில் ரூ.290, ரூ.390 மற்றும் ரூ.590 என மூன்று விதமான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூ.290 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ரூ.435 மதிப்பிலான டாக்டைம் கட்டணத்தை பயனாளர்கள் பெறலாம்.

ரூ.390 கொண்டு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.585 மதிப்பிலான டாக்டைம் கட்டணத்தை பயனாளர்கள் பெறலாம்.

ரூ.590 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ரூ.885 மதிப்பிலான டாக்டைம் கட்டணத்தை பயனாளர்கள் பெறலாம்.

இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.