BSNL 4G : கோவை, சேலத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை துவங்குகிறது

இந்தியாவில் 4ஜி சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முதற்கட்டமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாநகரங்களில் தொடங்க உள்ளது.

பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் கேரளா மாநிலம் உட்பட சில முக்கிய நகரங்களில் சோதனை ஓட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் 4 ஜி , தமிழகம் உட்பட பல்வேறு வட்டங்களில் விரவுப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 2 நகரங்களில் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சிம்மிற்கு பதிலாக, இலவசமாக 4ஜி சிம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் 4ஜி சிம் அட்டைகள் வழங்கப்பட்ட உடன் 4ஜி சேவை இந்த இரண்டு இடங்களிலும் தொடங்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இரு நகரங்களை தொடர்ந்து திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் நாகர்கோவில் நகரங்களில் 4ஜி சேவை தொடங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மார்ச் மாத முதல் வாரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் அதனை தொடர்ந்து சென்னை வட்டத்தில் முதற்கட்டமாக ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் பகுதிகளில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகம் தவிர பீகார் மாநிலத்தில் சுமார் 40 நாகரங்களில் 4ஜி சேவையை பிப்ரவரி இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

கடுமையான நிதி நெருக்கடி

ஜியோ வருகைக்குப் பின்னர் 4ஜி சேவை மட்டுமல்லாமல் 3ஜி மற்றும் 2ஜி வழங்குகின்ற நிறுவனங்களும் மிக கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தன. குறிப்பாக ஏர்செல், ஆர்காம், எம்டிஎஸ், யூனிநார் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறது.

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனம் உட்பட பிஎஸ்என்எல் நிறுவனமும் மிக கடுமையான நிதி நெருக்கட்டியை சந்தித்துள்ளன. இந்நிலையில் 4ஜி சேவையை தொடங்குவதற்கான முயற்சியை பொதுத் துறை டெலிகாம் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எனவே, நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிதி உதவி திட்டத்தை தயாரித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனத்தை மூடுவது குறித்து எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை.