பிஎஸ்என்எல் மின் இணைப்பு துண்டிக்கப்படுமா .?

நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான, பிஎஸ்என்எல் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்பு துறை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிஎஸ்என்எல் , எம்டிஎன்எல் நிறுவன மின் இணைப்பினை துண்டிக்க வேண்டாம், விரைவில் மின் கட்டணம் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

90,000 கோடி நஷ்டத்தில் பிஎஸ்என்எல்

ஜியோ வருகைக்குப் பின்னர் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவினை சந்தித்தன, குறிப்பாக ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் உட்பட பிஎஸ்என்எல் நிறுவனமும் இதில் ஒன்றாகும். மேலும் ஏர்செல், ஆர்காம் நிறுவனங்கள் திவாலாகின.

சில வாரங்களுக்கு முன்னதாக வெளியான தகவலின் படி பிஎஸ்என்எல் நிறுவனம், மிகப்பெரிய நிதி சிக்கலில் தவித்து வருவதுடன், தனது வராலாற்றில் முதன்முறையாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே சிரமப்பட்டது. சம்பள பிரச்சனைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை வழி வகை செய்திருந்தது.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை, வருகின்ற பாராளுமன்ற 2019 தேர்தலை முன்னிட்டு , மின் கட்டணம் செல்லுத்தாமல் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன இணைப்பினை துண்டிக்க வேண்டாம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி பற்றாக்குறையை களைவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். விரைவில், இதற்கு உண்டான தீர்வினை வழங்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு துறை ஒவ்வொரு மாநில அரசுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளது.