ஜியோவில் ரூ.33,737 கோடியை முதலீடு செய்யும் கூகுள்

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரமில் தொடர்து முதலீடு அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலகின் முன்னணி தேடுபொறி கூகுள் நிறுவனம் ரூ. 33,737 கோடி மூலம் 7.8 சதவீத பங்குகளில் முதலீடு செய்ய உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் அதிகபட்சமாக 9.99 சதவீத பங்குகளை (ரூ.43,574) ஜியோ பிளாட்ஃபாரத்தில் கையகப்படுத்தியதை தொடர்ந்து அதற்கு அடுத்தப்படியாக அதிக முதலீட்டை மேற்கொண்ட நிறுவனமாக கூகுள் விளங்குகின்றது. தற்போது வரை ஜியோ பிளாட்ஃபாரத்தில் கூகுள் உட்பட 14 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள மொத்த நிதி ரூ.1,52,055.45 கோடி ஆகும்.

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான ஃபேஸ்புக், குவால்காம், இன்டெல் போன்றவற்றுடன் கூகுளும் இணைந்துள்ளது. முன்பாக முதலீடு செய்த பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் (இருமுறை), விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர், முபடாலா, ஏ.டி.ஐ.ஏ, டி.பி.ஜி, எல் கேட்டர்டன், பி.ஐ.எஃப், இன்டெல், குவால்காம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆகும்.

எனவே, ஜியோ பிளாட்ஃபாரம் மூலம் 33 % பங்குகளை 14 நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளது.

மேலும் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து 5ஜி மற்றும் 4ஜி ஆதரவுடன் கூடிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.