பிஎஸ்என்எல் 4ஜி சேவை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

இந்தியாவின் பொதுத்துறை பிஎஸ்என்எல் டெலிகாம் 4ஜி சேவை வழங்குவது குறித்து மத்திய தொலை தொடர்புத் துறை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனால் மற்ற தனியார் செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் அனைத்தும் அதிவேக சேவையான 4ஜி சேவையை வழங்கி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் அதிவேக சேவையை வழங்கி வரும் நிலையில், அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க முன்வரவில்லை. இதனால் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான் லாபம் அடைகின்றன. மத்திய தொலைத் தொடர்பு துறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலட்சியத்தால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.

4 ஜி சேவையை விரைந்து வழங்க மத்திய அரசுக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து, மத்திய தொலை தொடர்புத் துறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.