இந்தியாவின் தொலைத் தொடர்பு துறை மிக கடுபையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஏர்செல் நிறுனத்தில் முதலீடு செய்த சுமார் $ 7 பில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 45,000 கோடி வரை மலேசியாவின் டைகூன் நிறுவனர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் இழந்திருக்கின்றார்.

ஏர்செல் திவால்

இந்திய சந்தையில் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்தின் வருகைக்கு பின்னர், மிக கடுமையான போட்டியை எதிர்கொண்ட நிறுவனங்களில் ஏர்செல் நிறுவனம் ஒன்றாகும்.இந்நிலையில் ஏர்செல் 2ஜி மற்றும் 3ஜி சேவையை நாட்டில் பல்வேறு வட்டங்களில் வழங்கி வந்த நிலையில் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சில வட்டங்களில் சேவையை நிறுத்திய நிலையில், கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் டவர் பிரச்சனை எதிர்கொண்டதால் சிக்னல் கிடைக்காமல் தவித்த நிலையில், தற்போது ரூ.15,500 கோடி கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை திவால் நிறுவனம் என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் (National Companies Law Tribunal – NCLT) மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் ரூ.15,500 கோடிக்கும் அதிகமாக கடன் சுமை இருப்பதால் தங்களை திவால் என்று அறிவித்து விடுமாறு, ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏர்செல் தமிழர்

மலேசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட மலேசியா வாழ் தமிழரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் , ஏர்செல் டெலிகாம் நிறுவனத்தில் கடந்த 2006 முதல் தொடர்ந்து 12 வருடங்களாக முதலீடு செய்த $ 7 பில்லியன் அளவிலான முதலீட்டை முற்றிலும் இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பாக ஏர்செல் நிறுவனத்தில் ஆனந்த அவர்கள் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிறுவனத்தில் 45 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் முதலீடாக செய்த மொத்த தொகையை இழந்துள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்நிறுவனம் மூதலீடு செய்துள்ள லாபம் தருகின்ற சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் சவுத் ஆசியா எஃப்எம் லிமிடெட் நிறுவனத்தின் ரெட் எஃப்எம், சன் டைரக்ட் ஆகியவற்றில் செய்துள்ள முதலீட்டை தொடர்ந்து பராமரிக்க வாய்ப்புகள் உள்ளது.