ஏர்டெல் உடன் இணைந்த டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம்

டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே டாடா டோகோமா வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.

டாடா டெலிசர்வீசஸ்

கடந்த அக்டோபர் 2017-ல் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்த தொடங்கிய பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸ்காம் நிறுவனங்களின் முயற்சி பல்வேறு சட்ட சிக்கல்களுக்குப் பிறகு தற்போது இணைப்பிற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) மற்றும் தொலைத்தொடர்பு துறை (Dot) ஆகியவை அனுமதி அளித்துள்ளது.

ரூ.40,000 கோடி கடனில் சிக்கி தவிக்கின்ற டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் பிரிவுகளான 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் டாடா டெலிசர்வீசஸ் (டிடிஎஸ்எல்) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா (டிடிஎம்எல்) ஆகிய நிறுவனங்களின் 4 கோடி வாடிக்கையாளர்களை பார்தி ஏர்டெல் கையகப்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், அந்த 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள இரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், 3ஜி, 4ஜி சேவைக்கான அலைக்கற்றை உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு மாற்றப்படுகின்றது.

கடனில்லா ரொக்கமில்லா நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக எந்தவொரு கட்டணத்தையும் ஏர்டெல் செலுத்தாது. மேலும் இந்நிறுவனத்தின் கடனுக்கு டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் பொறுப்பாகும். அலை கற்றை ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசுக்கு வழங்கும் மொத்த தொகையில், 20 சதவீதமான ரூ.9,000 முதல் ரூ.10,000 கோடியை பார்தி ஏர்டெல் அளிக்கும் மீதமுள்ள 80 சதவீத தொகையை டாடா நிறுவனம் வழங்குகின்றது.

இந்த இணைப்பினால் பார்தி ஏர்டெல் நிறுவனம் 178.5 MHz அலைக்கற்றை 1800, 2100 மற்றும் 850 MHz ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளும்.