இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்த ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் புதிய பிளான்களின் விலை 15% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜியோ பிளான் கட்டணம் 15 % அதிகரிப்பு

இலவச சேவை வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற டேட்டா என பல்வேறு சலுகைகள் வாயிலாக குறைந்த காலகட்டத்தில் 13 கோடிக்கு அதிகமான பயனாளர்களை பெற்ற ஜியோ நிறுவனம் புதிய பிளான் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் என இரண்டிலும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. குறிப்பாக பெரும்பாலான பயனாளர்களின் தேர்வாக அமைந்திருந்த தன் தனா தன் ரூ.399 பிளான் வேலிடிட்டி அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 84 நாட்கள் வழங்கப்பட்டு வந்த இந்த டேட்டா பிளான் தற்போது 70 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான் முந்தைய பிளானை விட ரூ.60 வரை உயர்த்தப்பட்டு ரூ.459 என வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 க்கு குறைந்த பிளான்களில் ஒரு நாள் பயன்படுத்தும் டேட்டா வரம்பு 150எம்பி என குறைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை தினசரி பயன்பாட்டு டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு வழங்கப்படும் 128 Kbps வேகம் இனி 64 Kbps ஆக குறைக்கப்பட்டுள்ளதால், இணையத்தை அனுகுவது இனி மிகவும் சவாலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலை டேட்டா பிளான்களை அறிமுகம் செய்தால் ஜியோ நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் புறக்கணிக்க வாய்ப்பாக அமையக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.