வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் அழைப்பு கட்டணம் உயரவுள்ளது.

கால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி

ஜிஎஸ்டி வரி விதிப்பு

தொலை தொடர்பு துறையில் பெரும் தாக்கத்தை ஜிஎஸ்டி வருகை ஏற்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான  கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன. தொலை தொடர்பு துறைக்கு 18 சதவிகிதம் பிரிவு என வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 15 சதவிகித நடைமுறையே தொலைதொடர்பு துறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் 18 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளதால் அழைப்புகள் உள்பட தொலை தொடர்பு துறை சார்ந்த சேவைகளான டேட்டா உள்பட மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி

இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர் அசோசியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அதிகரித்து வருகின்ற இலவச சேவை போட்டியினால் தொலை தொடர்பு துறை கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் தற்பொழுது ஜிஎஸ்டி வரி விதிப்பில் மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

தற்பொழுது தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய மொத்த வருமானத்தில் 30 சதவிகிதத்தை வரி மற்றும் ஸ்பெக்ட்ரம் உரிமம் , பயன்பாடு சார்ந்தவற்றுக்கு செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.