அதிக கட்டணம் வசூலித்த ஐடியா மீது டிராய் அதிரடி நடவடிக்கை

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடியா செல்லூலார் நிறுவனம் ரூ. 2.97  கோடி வரை கூடுதலான கட்டணத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் அழைப்பு மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடம் வசூலித்துள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த ஐடியா

கடந்த 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய தொலைத்தொடர்பு வட்டங்களுக்குள் மேற்கொண்ட அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகவே கருத வேண்டும் தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்திருந்தது.

குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு ஐடியா செல்லுலார் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து , அந்த தொகையை வாடிக்கையாளரிடம் திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அது தொடர்பான கோப்புகள் முறையாக இல்லாததால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பியளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிறுவனம், 2005 மே முதல் 2007 ஜனவரி வரையில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.2,97,90,173 தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்த தொகை, தொலைத்தொடர்பு நுகர்வோரின் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தில் (டிசிஇபிஎப்) வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Recommended For You