இந்தியாவின் ஆதித்திய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் மற்றும் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட வோடபோன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா லிமிட்டெட் (Vodafone Idea Limited) என்ற பெயரில் இயங்க தொடங்க உள்ளதை குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

வோடபோன் ஐடியா லிமிட்டெட்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் மற்றும் மூன்றாவது மிகப்ப்ரிய நிறுவனமாக விளங்கும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைவதனால் ஒட்டுமொத்த இரு நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 44 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயரை மாற்றுவது குறித்து சிறப்புபொதுக்குழு கூட்டம் (Extraordinary General Meeting (EGM) கடந்த வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் முறையாக பெயர் மாற்றப்பட்டு நிறுவன பதிவாளரிடம் தகவல் அளிக்கப்பட உள்ளது.

வோடோபோன் , ஐடியா நிறுவனங்களும் இணைவது குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு துறையின் அனுமதிக்காக இந்த நிறுவனங்கள் காத்திருக்கின்றன. ஒருங்கிணைந்த நிறுவனத்தில் வோடபோன் 45.1 சதவித பங்குகளை வைத்திருக்கும். ஆதித்யா பிர்லா குழுமம் 26 சதவித பங்குகளையும், ஐடியா நிறுவனத்தின் பங்குதாரர்கள் 28.9 சதவித பங்குகளையும் வைத்திருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாற்றமுடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.15,000 கோடிநிதி  திரட்டவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அனுமதியும் சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்த நிதி நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கும், ஜியோ மற்றும் ஏர்டெல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ள பயன்படும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது.

வரும் ஜூன் மாத இறுதிக்குள் இரு நிறுவனங்களும் இணைந்து முழுமையாக ஒரே நிறுவனமாக செயல்பட தொடங்க உள்ள நிலையில் இரு நிறுவனத்திலும் பணிபுரிகின்ற ஊழியர்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணியை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பாலேஷ் சர்மா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.