இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலி வருகையா ?

பைட் டான்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்துக்கு விளக்கமளித்துள்ள இந்நிறுவனம் இந்தியாவில் தரவுகளை சேமிக்கவும், உள்ளுர் விதிகளுக்கு கட்டுப்படும் வகையில் செயல்படுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 20 மில்லியனுக்கு கூடுதலான பயனாளர்களை பெற்றுள்ள டிக் டாக் உட்பட யூசி பிரவுசர், கேம் ஸ்கேனர், ஹெலோ என 59 க்கு மேற்பட்ட சீன செயலிகளும், கூடுதலாக சமீபத்தில் 47 செயலிகளும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப
அமைச்சகத்துக்கு 70க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள பைட் டான்ஸ் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் எங்கள் தரப்பு பதிலை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளோம். மேலும், சந்தேகங்களை தீர்ப்பதற்கான விளக்கங்களை வழங்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். எங்கள் செயல்பாடுகள் முழுவதும், தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகள் உள்ளிட்ட உள்ளூர் சட்டங்களுக்கு இணங்குவதற்கான தெளிவான உறுதிப்பாட்டை நாங்கள் நிரூபித்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு டிக் டாக் நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்கும் பட்சத்தில் மீண்டும் இந்த செயலி இந்தியாவில் பயன்பாட்டிற்கு கிடைக்கப் பெறலாம். தற்போது இந்நிறுவனத்தின் தரவுகள் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் சேமிக்கப்படுகின்றது.

மேலும் இந்திய ஒன்றிய அரசு பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை கொண்ட  250க்கு மேற்பட்ட சீன செயலிகளை தடை செய்வதற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது. இந்த பட்டியலில் மிகவும் பிரசத்தி பெற்ற பப்ஜி வீடியோ கேமும் இடம் பெற்றுள்ளது.