சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டுள்ள யுஐடிஏஐ ஆதார் தகவல்களை யாரும் திருடவே இயலாது என உறுதியாக மறுத்துள்ளது.

ஆதார் தகவல் – யுஐடிஏஐ

சமீபத்தில் பிரசத்தி பெற்ற விக்கிலீக்ஸ் வெளியிட்ட எக்ஸ்பிரஸ் லேன் என்ற பெயரிலான கட்டுரையில் ஆதார் விபரங்களை அமெரிக்காவின் புலானாய்வு மையமான சி.ஐ.ஏ திருடியதாக வெளியிட்ட தகவலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, யுஐடிஏஐ அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆதார் அட்டை விவரங்களை மின்னணு முறையில் சேமித்து வைப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதாகும்.அதனை எந்தவொரு வெளிநாட்டு அமைப்பும் ஊடுருவி, தகவல்களைத் திருடுவது என்பது எந்த முறையாலும் இயலாத காரியமாகும்.

ஆதார் எண்களில் பயன்படுத்தப்படும் விரல் ரேகை சரிபார்ப்பு முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டு தகவல்கள் திருடப்படுவதாக, தவறான உள்நோக்கத்துடன் சிலர் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.

விரல் ரேகை சரிபார்ப்புக் கருவி மூலம், ஒருவரின் விரலைக் கொண்டு திறக்காதவரை ஆதார் விவரங்களைப் பெறவே முடியாது. எந்த முறையான இணையதளத் தாக்குதல்களிலிருந்து ஆதார் மின்னணு தகவல் சேமிப்பகங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

ஆதார் மையங்களில் பயன்படுத்தப்படும் விரல் ரேகை சரிபார்ப்புக் கருவிகள் அனைத்தும், மிக கடுமையான சோதனைகளுக்குப் பிறகு அவற்றின் தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

நாட்டில் இதுவரை 117 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தினந்தோறும் 4 கோடி ஆதார் அட்டை விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. ஆனால், இதுவரை ஒரு முறை கூட ஆதார் தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்ததில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது