இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.999 விலையில் வோடபோன் பாரத் 2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

வோடபோன் பாரத் 2 அல்ட்ரா

இந்திய சந்தையில் 4ஜி சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் ஜியோ நிறுவனம் ரூ.1500 மதிப்புள்ள ஃபீச்சர் ரக மொபைல் போன் மாடலை இலவசமாக வழங்குவதாக வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ.2899 விலையில் வெளியிட்ட 4ஜி ஸ்மார்ட்போன் மாடலில் ரூ.1500 வரை கேஸ்பேக் வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி ஆதரவு பெற்ற ஃபீச்சர ரக பாரத்-1 மொபைலை ரூ.2200 விலையில் வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது வோடபோன் நிறுவனமும் இணைந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா

4ஜி ஆதரவை பெற்ற மைக்ரோமேக்ஸ் பாரத் வரிசை மொபைல் போன்களில் வெளியாகியுள்ள பாரத் 2 அல்ட்ரா மொபைல் போன் 4 அங்குல WVGA திரையை பெற்றிருப்பதுடன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போனில் 1.3Ghz ஸ்பிரெட்டிரம் SC9832 சிப்செட் கொண்டு இயக்கப்படுவதுடன் 512 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியை கொண்டிருப்பதாக உள்ளது. இதை தவிர கூடுதலாக சேமிப்பை நீட்டிப்பதற்கு என மைக்ரோ எஸ்டி அட்டை பொருத்தும் வகையிலான ஸ்லாட் வசதி கொண்டதாகவும் வந்துள்ளது.

கேமரா துறையில் முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை எதிர்கொள்ளும் வகையில் 0.3 மெகாபிக்சல் சென்சார் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது.

பின்புறத்தில் படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யும் திறன் பெற்ற 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் போனில் 4ஜி எல்டிஇ , 3ஜி , 2ஜி ஆதரவு,இரட்டை சிம் கார்டு வசதியுடன் 1300 mAh  பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சில்லறை விற்பனை விலை ரூ.2,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வோடபோன் சிம் சலுகைகள்

ரூ.2,899 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பாரத்-2 அல்ட்ரா போனுடன் புதிய மற்றும் பழைய வோடபோன் பயனாளர்கள் இந்நிறுவனத்தின் 4ஜி சேவையை வோடபோன் சூப்பர்நெட் 4ஜி என்ற திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.

ரூ.2,899 விலை கொண்ட ஸ்மார்ட்போன் மாடலில் ரூ.1900 வரை கேஸ்பேக் வழங்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. இது போட்டியாளர்களை விட மிக குறைந்த விலை ஸ்மார்ட்போன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.150 மதிப்புள்ள ரீசார்ஜ் தொடர்ந்து 36 மாதங்களுக்கு மேற்கொள்ளும் போது முழுமையாக ரூபாய் 1900 வரை கேஸ்பேக் பெறலாம்.

அதாவது முதல் தவனையாக  ரூபாய் 900 திரும்பி பெற 18 மாதங்களுக்கு பிறகு பெறலாம். அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூபாய் 1000 திரும்ப பெறலாம், ஆக மொத்தம் ரூ.1900 ஆகும். திரும்பி அளிக்கப்படும் தொகை இந்நிறுவனத்தின் எம்-பேசா (M-pesa) கணக்கில் சேர்க்கப்படும்.