பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றியது

இந்தியாவின் முதன்மையான இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வால்மார்ட் நிறுவனம் ரூ. 1,07,600 கோடி மதிப்பில் கையகப்படுத்தயுள்ளது.

பிளிப்கார்ட்

உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் தனது சந்தையை விரிவுப்படுத்தவும், இந்திய சந்தையில் நுழையவும் தனது முதற்படியை இந்தியாவின் முன்னணி இணையதள சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கவுள்ளது.

சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாஃப்ட், டென்சென்ட், சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை தொடந்து தக்கவைத்துக்கொள்ள உள்ளது.

சந்தை ஆய்வு நிறுவனமான ஃபாரஸ்டரின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் இணையதள விற்பனையின் மதிப்பு சுமார் 2,100 கோடி அமெரிக்க டாலராக (சுமார் 1,41,250 கோடி இந்திய ரூபாய்) இருந்தது. இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இந்த மதிப்பு மேலும் அதிகமாகும் என்று கணிக்கப்படுகிறது.

சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்கியுள்ளது. மீதமுள்ள 23 சதவிகித பங்குகளை ஃப்ளிப்கார்ட் நிர்வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.