உலகளாவிய வலை : இன்றைக்கு நாம் அனுகுகின்ற உலகளாவிய வலை (World Wide Web) தொடங்கப்பட்டு 30வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் வலைதளத்தை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களின் அறிக்கையுடன் சில முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.
இணையம் வேறு உலகளாவிய வலை என்பது வேறு என்பதனை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இணையம் என்பது 1960 ஆம் ஆண்டு தொடங்கியே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் வோர்ல்டு வைட் வெப் அதாவது உலகளாவிய வலையினை மார்ச் 12ந் தேதி டிம் பேர்னர்ஸ் லீ அவர்களால் உருவாக்கப்பட்டு இன்றைய காலகட்டத்தின் மிகப்பெரிய தகவல் தொடர்பு தளமாக மாறியுள்ளது. ஆனால் கூடவே மிகப்பெரிய ஆபத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளதாக வலைதளத்தின் தந்தை என அறியப்படுகின்ற டிம் பெர்னர்ஸ்-லீ குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய வலையின் 30வது பிறந்த நாள்
1989 ஆம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி வலையமைப்பின் மாதிரியை சமர்ப்பித்தார். இவர் சமர்பித்த தினத்தை உலகளாவிய வலையின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் டிம் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய விபரங்களை காணலாம்.
இணையம் என்பது ஒரு பொது சதுக்கம் போல இதில் நூலகம், மருத்துவ அலுவலகம், கடை, பள்ளி, வடிவமைப்பு ஸ்டூடியோ, அலுவலகம் சார்ந்த பயன்கள், பொழுதுப்போக்கு, வங்கி சார்ந்த செயல்பாடுகள், என இன்னும் பல. நிச்சயமாக ஒவ்வொரு புதிய அம்சமும், ஒவ்வொரு புதிய வலைத்தளமும், ஆன்லைனில் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்கள் என இருதரப்பினர்களுக்கும் வலை கிடைக்கச் செய்வதற்கு மிகவும் கட்டாயமானதாக உள்ளது.
மேலும் அவர் கட்டுரையில், இணையம் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியபோது, மிக எளிதாக ஒவ்வொருவரின் குரலை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியது. ஆனால் மறுபுறத்தில் இது ஸ்கேமர்களுக்கு வாய்ப்பையும் உருவாக்கியது, வெறுப்பை பரப்புபவர்களுக்கு குரல்களும் அதிகரித்துள்ளது மற்றும் அனைத்து விதமான குற்ற செயல்களும் இணையத்தில் எளிதாகிவிட்டது மிகப்பெரிய வருத்தத்தை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய வலைதளங்கள் மூன்று மிகப்பெரிய குறைகளை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவை பின் வருமாறு :-
1 . உள்நோக்கமுள்ள செய்திகள், தீங்கிழைக்கும் நோக்கம், அரசு நிதியுதவியுடன் கூடிய ஹேக்கிங் , குற்ற செயல்களுக்கான ஆதரவு, குற்றவியல் நடத்தை, மற்றும் ஆன்லைன் தொல்லைகள் அதிகரித்துள்ளது.
2. பயனருக்கான மதிப்பை உணராமல் அவர்களை பலியிட்டு, உருவாக்கப்படுகின்ற விபரீதமான சலுகைகள் மற்றும் அமைப்பினை உருவாக்குவது, விளம்பர அடிப்படையிலான வருவாய் மாதிரிகள், வணிக ரீதியாக வெகுமதியளிக்கும் தவறான கிளிக் மற்றும் போலி செய்திகள் வைரலாக பரவுவது.
3. திட்டமிடப்பட்ட எதிர்மறையான செயல்களுக்கான நோக்கத்தை கொண்ட வலைதளங்கள், தவறான தகவல்கள் மற்றும் ஆன்லைன் சார்ந்த தகவலின் நம்பகத்தன்மை.
டிம் பெர்னேர் லீ அவர்கள் உருவாக்கிய இணையத்தின் நோக்கம் இது தான்..
இணையம் என்பது கலாச்சாரம் மற்றும் புவியியல் சார்ந்த எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒருவருக்கொருவர், செய்திகளைப் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான திறந்த மேடையாக இருக்க வேண்டுமென்ற கற்பனை செய்திருந்தேன் என குறிப்பிடுகின்றார்.
உலகளாவிய வலையின் 30வது பிறந்த நாளில் இணையத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி நமக்கும், நம்மை சார்ந்தோருக்கும் நன்மையை வழங்குவோம்.
மேலும் படிங்க – உலகின் முதல் வலைதளம் பற்றிய செய்திகள்