முடிவுக்கு வந்தது.! யாஹூ மெசஞ்சர்

20 ஆண்டுகால யாஹூ மெசஞ்சர் (Yahoo Messenger) சேவை  ஜூலை 17, 2018 முதல் முடிவுக்கு வருவதாக யாஹூ தலைமை நிறுவனமான Oath முடிவெடுத்துள்ளது.  எனவே 6 மாதங்களுக்கு உரிய சாட் வரலாற்றை தரவிறக்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாஹூ மெசஞ்சர்

இணைய உலகின் பழமையான மெசஞ்சர்களில் ஒன்றான 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யாகூ நிறுவனத்தின் யாஹூ மெசஞ்சர் சேவைக்கு குறைந்து வரும் ஆதரவை தொடர்ந்து இதற்கான ஆதரவினை யாகூ நிறுத்திக் கொள்ள திட்டமிடுள்ளது.

இதுகுறித்து யாகூ சார்பாக வெளியாகியுள்ள பதிவில், வருகின்ற ஜூலை 17 முதல் யாகூ மெசஞ்சரில் உள்நுழைவது மற்றும் புதிய பயனர்கள் இணைவதற்கான ஆதரவினை நிறுத்துவதுடன், இத்தனை ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறுவதுடன், எதிர்கால மாற்றங்கள் மற்றும் தற்போதைய நிலவும் போட்டிக்கு ஈடான புதிய தகவல் தொடர்பு நுட்பத்தை விரைவில் செயற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

முதன்முதலாக கணினி பயனர்களை குறிவைத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மெசஞ்சர் சேவை வாயிலாக பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் , வாட்ஸ்அப், ஐமெசஞ் போன்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால் மெல்ல சரிந்தது.

இதற்கு முன்பாக யாகூ நிறுவனத்தின் தலைமை நிறுவனமான oath தனது மற்றொரு நிறுவனமான AOL மெசேஞ் சேவையை நிறுத்தியிருந்தது. தற்போதைக்கு யாகூ நிறுவனம் சோதனை ஓட்ட முறையில் செயற்படுத்தி வரும் யாகூ ஸ்குயரல் (Yahoo Squirrel) விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயனாளர்கள் தங்ளது 6 மாத சாட்டிங் வரலாற்றை  யாகூ மெசஞ்சரிலியிருந்து தரவிறக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.